70 லட்சம்பேர் வருவதற்கு என்ன அவசியம் உள்ளதென்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.
New Delhi: டிரம்பின் இந்திய பயணம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி 70 லட்சம்பேர் வந்து வரவேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் என்ன கடவுளா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் இந்தியாவுக்கு பிப்ரவரி 24 மற்றும் 25-ம்தேதிகளில் வருகின்றனர்.
அவரை வரவேற்பதற்கு அகமதாபாத்தில் 70 லட்சம்பேர் கூடுவார்கள் என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் டிரம்பின் வருகை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆதிர் ரஞ்சன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
அமெரிக்க அதிபர் என்ன கடவுளா? 70 லட்சம்பேர் வந்து அவரை வரவேற்பதற்கு! டிரம்ப் தனது சொந்த நலனுக்காக இந்தியா வருகிறார். அமெரிக்காவின் நலனைத்தான் அவர் விரும்புகிறார். இந்தியாவை மகிழ்விப்பதற்கு அவர் இங்கு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் முதலில் அகமதாபாத் வருகின்றனர். அங்கு சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார்கள்.
இதன்பின்னர் மாலையில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் என்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.