This Article is From May 14, 2019

நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசுவது தீவிரவாதம் இல்லையா? கே.எஸ்.அழகிரி கேள்வி

கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா? என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசுவது தீவிரவாதம் இல்லையா? கே.எஸ்.அழகிரி கேள்வி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று அளித்த பேட்டியில்,

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா? இதுவும் தீவிரவாதம். சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாதி மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம், இந்து மகா சபை போன்றவற்றில் உள்ளவர்கள், மாற்று கருத்து உடையோரை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கை உடையவர்கள்.

ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்புக்கு இணையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எனவே கமல்ஹாசன் கூறியதை ஆயிரம் சதவீதம் ஆதரிக்கிறேன் என்று அவர் கூறினார்.

.