This Article is From Jun 01, 2020

173 உயிர்களை பலி கொடுத்துவிட்டு பெருமைப்பட்டுக் கொள்வது சரிதானா? தினகரன் கேள்வி

நோயைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்பதையே இந்த அபாயகரமான புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

173 உயிர்களை பலி கொடுத்துவிட்டு பெருமைப்பட்டுக் கொள்வது சரிதானா? தினகரன் கேள்வி

173 உயிர்களை பலி கொடுத்துவிட்டு பெருமைப்பட்டுக் கொள்வது சரிதானா? தினகரன் கேள்வி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தமிழகத்தில் இதுவரை 173 உயிர்களை பலி கொடுத்துவிட்டு பெருமைப்பட்டுக் கொள்வது மனிதத்தன்மையுள்ள செயல்தானா? தமிழகத்தில் ஒரு உயிரைக்கூட கொரோனாவுக்காக பலியாக விடமாட்டோம் என்று வசனம் பேசியதெல்லாம் என்னவாயிற்று? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மேலும் கூறியதாவது, சென்னை மாநகரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை எதிர்கொண்டு சமாளித்து உரிய சிகிச்சை வசதிகளை அளிக்க வேண்டிய தமிழக அரசு, முதல்வர் பழனிசாமியின் நிர்வாகத் திறமையின்மையால் திணறிவருவதும் அதன் காரணமாக நோயாளிகள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதும் வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியதாகும்.

கொரோனா தொற்றிலிருந்து சென்னையைக் காப்பாற்ற பல திட்டங்களை வைத்திருக்கிறோம்... ஒவ்வொன்றாக அமல்படுத்தி தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்று முதல்வர் பழனிசாமியும், சுகாதார அமைச்சரும், அதிகாரிகளும் வீர வசனம் பேசி பேட்டிகள் கொடுக்கிறார்களே தவிர அதைச் செயலில் காட்டுவதாகத் தெரியவில்லை.

நேற்று வரை சென்னை மாநகரப் பகுதிகளில் மட்டும் 14 ஆயிரத்து 802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 129 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் 66 சதவிகிதம் பேர் சென்னைவாசிகள். மரணமடைபவர்களில் நான்கில் ஒருவர் சென்னைவாசி.

நோயைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்பதையே இந்த அபாயகரமான புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவு என்று நாள்தோறும் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர். தமிழகத்தில் இதுவரை 173 உயிர்களை இந்நோய்க்காக பலி கொடுத்துவிட்டு இப்படி பெருமைப்பட்டுக் கொள்வது மனிதத்தன்மையுள்ள செயல்தானா? தமிழகத்தில் ஒரு உயிரைக்கூட கொரோனாவுக்காக பலியாக விடமாட்டோம் என்று வசனம் பேசியதெல்லாம் என்னவாயிற்று?

சென்னையிலுள்ள பெரிய அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் 300 முதல் 600 நோயாளிகள் வரை மட்டுமே சிகிச்சை அளிக்க படுக்கை வசதி உள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் சுமார் ஏழாயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இனியும் வரப்போகிற நோயாளிகளுக்கு அரசு என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது?

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக செய்திகள் வருகின்றன. எனவேதான் ஏதேதோ காரணங்களைச் சொல்லி நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் ஏற்படும் சங்கடங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஜூன், ஜூலை மாதங்களில்தான் இந்நோயின் தாக்கம் உச்சத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்ததை தமிழக அரசு நினைவில் வைத்திருந்தால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்நேரம் எடுத்திருப்பார்கள்.

சென்னையிலுள்ள திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளில் உள்ள அரங்கங்களை மாநகராட்சி கைப்பற்றி பல வாரங்கள் ஆகிவிட்டன. அதில் குறைந்தபட்சம் படுக்கை வசதியை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளை இதுவரை செய்யவில்லையே ஏன்?

தொற்று பரவத் தொடங்கிய காலங்களில் அரசு தினசரி வெளியிடும் மருத்துவக் குறிப்பில், எவ்வளவு படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று சொல்லிவந்தார்கள். கடந்த பல வாரங்களாக அந்த விவரத்தைச் சொல்வதையே தவிர்ப்பதன் காரணம் என்ன?

இப்படி எத்தனையோ கேள்விகள் எழுந்தாலும் எவற்றுக்கும் பதில் சொல்லும் மனநிலை தமிழக அரசுக்கு இல்லை என்பது வெட்கக்கேடானாது. இந்த மனநிலையை மாற்றிக்கொண்டு, நோய்த்தொற்று அதிகரித்து வருவதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை இனிமேலாவது அரசு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

.