Periyar Rajini Controversy: 'ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கறுப்புக் கொடி காட்டினார்கள்'
Periyar Rajini Controversy: சென்ற வாரம் நடந்த ‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அவர் பேசியதற்கு பல தரப்பினர் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். “ரஜினி பேசியதில் எந்த உண்மையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர்கள் தொடர்ந்து சொல்லி வன்றனர். ரஜினிக்கு எதிரான போராட்டங்கள் வீரியமடைந்த போதும், “நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வாரங்கள் கடந்து இந்தப் பிரச்னை தொடர்ந்து கனன்று கொண்டிருக்கிறது.
முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதை ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அந்தச் சிலைகளுக்கு செருப்பு மாலைகளும் அணிவிக்கப்பட்டிருந்தன. கடவுள் அவதாரங்களை செருப்பால் அடித்தார்கள். இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது,” என்று சர்ச்சையாக பேசினார்.
துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
ஆனால், இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்ற கேள்விதான் இப்போது பிரதானப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு, பெரியார் தலைமையில் நடந்த அந்த பேரணியில் கலந்து கொண்ட திராவிடர் கழக நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி செல்வேந்திரன், உண்மையைப் போட்டுடைத்துள்ளார்.
1971, ஜனவரி 23 அன்று நடந்த சம்பவம் பற்றி செல்வேந்திரன், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அன்று ஊர்வலம் நடந்தது உண்மை. ஆனால் ரஜினி சொன்னது போல ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக இருக்கவில்லை. அதற்கு செருப்பு மாலையும் அணிவிக்கவில்லை. சிலைகள் முழு அலங்காரத்தோடு வந்தன. இன்னும் சொல்லப் போனால் திமுக அரசாங்கம் ஊர்வலத்துக்குக் கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்திருந்ததன. ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கறுப்புக் கொடி காட்டினார்கள். அதில் ஒருவர், நான் நிர்வகித்த வந்த லாரி மீது செருப்பைக் கொண்டு வீசினார். அதில்தான் ராமர், சீதை சிலைகள் இருந்தன. அது ராமர் சிலை மீது பட்டது. இதனால், அங்கிருந்த தி.க-வினர் கரகோஷம் எழுப்பினார்கள்.
நிறைய செருப்புகள் தொடர்ச்சியாக எங்கள் மீது விழுந்தன. என் மீதும் ஒரு செருப்புப் பட்டது. இதன் பிறகுதான் ஜன சங்கத்தினர் தூக்கி அடித்த செருப்பை வைத்தே, ராமர், சீதை சிலைகளை அடித்தோம். அவ்வளவுதான். இந்த விஷயம் எதுவும் பெரியாருக்கு அப்போது தெரியாது. பெரியார், எதன் மீதும் செருப்பை வைத்து அடிக்கவில்லை. துக்ளக் பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றம் துக்ளக் பத்திரிகையைக் கண்டித்தது. ஆனால், இப்போது அதைத் திரித்து, அரசியல் ஆதாயத்துக்காகப் பேசுகிறார் ரஜினி,” என்று முடித்தார்.