This Article is From Jul 27, 2019

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானதா? உண்மைக்கு மாறான வரலாறு: திருமா கண்டனம்!

தமிழை சமஸ்கிருதத்திற்கு பின்னால் தோன்றிய மொழி என்று இளைய தலைமுறைக்கு தவறான வரலாற்றை பதிவு செய்யும் நோக்கில் பாட்டத்திட்டத்தை வாக்குத்தவர்கள் யார்?

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானதா? உண்மைக்கு மாறான வரலாறு: திருமா கண்டனம்!

தவறான வரலாற்றில் பாடத்திட்டத்தை வகுத்தவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

சமஸ்கிருதத்திற்கு பின்னால் தோன்றியது தமிழ் என்று தவறாக வரலாற்றில் பாடத்திட்டத்தில் வகுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் கி.மு. 300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு பாடப்புத்தக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தேசிய கீதம் தவறாக குறிப்பிடப்பட்டும், பாரதியார் காவி தலைப்பாகை அணிந்திருப்பது போல் படம் இடம்பெற்றும் சர்ச்சைகள் கிளம்பின. தற்போது தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழக அரசு. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதவில், எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால், சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது, தமிழை சமஸ்கிருதத்திற்கு பின்னால் தோன்றிய மொழி என்று இளைய தலைமுறைக்கு தவறான வரலாற்றை பதிவு செய்யும் நோக்கில் பாட்டத்திட்டத்தை வாக்குத்தவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உண்மைக்கு மாறாக வரலாற்றை பதிவு செய்த அந்த பாடத்திட்டத்தை மாற்றி வரலாற்று உண்மையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார். 

மேலும், அவர் கூறும்போது, நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத சட்ட மசோதாக்களையும் அதிமுக அரசு ஆதரிக்கிறது. கூட்டணி தர்மம் என்பது வேறு, கொள்கை நிலைப்பாடுகள் என்பது வேறு, அதை மனதில் வைத்து அதிமுக செயல்படவில்லை. பாஜக எதை முன்மொழிந்தாலும், அதனை வழி மொழியும் நிலையில் அதிமுக இரு அவைகளிலும் செயல்படுகிறது என்று அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

.