This Article is From Oct 25, 2019

சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு? ஓ.பி.எஸ் விளக்கம்!

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் கிட்டத்தட்ட 44ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சசிகலா, தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு? ஓ.பி.எஸ் விளக்கம்!

இரு தொகுதிகளும் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - ஓ.பி.எஸ்

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில்  காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (அக்.24) எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை காலையில் தொடங்கியது முதல், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. 

இதைத்தொடர்ந்து, காலை 11 மணி அளவிலே சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட தொடங்கினர். இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தொடர் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இதேபோல், நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் காங்கிரஸ் வேட்பாளரை விட 15ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்து வந்தார்.

இதனிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். இரு தொகுதிகளும் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார். மேலும், இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றி தொடரும் என்று கூறினார்.

அப்போது, டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், இருவரையும் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என்றார். 

.