This Article is From Nov 08, 2019

மிசாவில் கைதானாரா ஸ்டாலின்? ஆதாரம் எங்கே? சந்தேகம் எழுப்பும் அதிமுக!!

மிசா குறித்து அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் மு.க.ஸ்டாலின் பெயர் இல்லை. இரா.செழியன் எழுதிய புத்தகத்தில் ஸ்டாலின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.

மிசாவில் கைதானாரா ஸ்டாலின்? ஆதாரம் எங்கே? சந்தேகம் எழுப்பும் அதிமுக!!

ஸ்டாலின் கைதானதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை - ஜெயக்குமார்

மிசாவில் ஸ்டாலின் கைதானதற்கான குறிப்புகள் எங்கும் இல்லை என்றும், மிசாவில் கைதானதற்கான நோட்டீஸ் ஆதாரத்தைக் காண்பிக்காதது ஏன் என்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இழிவு படுத்தியதாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக அறிவிப்புகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன.

இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள் என திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுகவின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

நான் மட்டுமல்ல, திமுகவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம். அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டப்பேரவை ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவுகொள்ளலாம் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, மிசா குறித்து அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலும் மு.க.ஸ்டாலின் பெயர் இல்லை. 

இரா.செழியன் எழுதிய புத்தகத்தில் ஸ்டாலின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. அவரது பெயர் இஸ்மாயில் கமிஷனிலும் கிடையாது. ஷா கமிஷனிலும் கிடையாது. இரா.செழியன் எம்.பி.யாக இருந்த காலத்தில், மிசா காலக் கொடுமைகள் குறித்து எழுதிய புத்தகத்தில், ஸ்டாலின் கைதானதற்கான குறிப்புகள் ஏதும் இல்லை" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறும்போது, மிசா சமயத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நோட்டீஸ் அவரிடம் இருக்கும். அதன் நகல்கள் ஆவணக் காப்பகத்திலும் நீதித்துறையிலும் இருக்கும். இதை நிச்சயமாக வெளியே காட்டுவோம். 

ஆனால், அதற்கு முன்பு அவரே காட்டியிருக்கலாம். நான் கேள்விதான் எழுப்பினேன். எந்தக் குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று.. அதற்கு, அந்த நோட்டீஸைக் காண்பித்து, மிசாவில் தான் கைதானேன் என பதில் அளித்திருக்கலாம். அதைச் சொல்லாமல், இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர் என்றார். 

.