2வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுகவை சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டது. குறிப்பாக ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்துக்கும், மாநிலங்களவை உறுப்பினரான வைத்திலங்கத்திற்கும் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுகவை சேர்ந்த எவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. அமைச்சர்கள் தேர்வு முழுவதுமே மோடி மற்றும் அமித் ஷாவின் கையில்தான் இருந்த நிலையிலும் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு எந்த பதவியும் அளிக்காதது அக்கட்சியினருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது,
தமிழகத்தில் இருந்து மாவட்ட தலைவர்கள் உட்பட 150 பேர் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களை போல் கட்சிக்காக உழைத்த தொண்டர்களையும் அழைத்து நடைபெற்ற பதவியேற்பு விழா மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இதே உற்சாகத்தோடு பணியாற்றி தமிழத்தில் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.
தமிழகத்தில் 2 பேருக்கு அமைச்சரவை கொடுக்கப்படுகிறது என்று அனைவராலும் பரவலாக பேசப்பட்டது, அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லையா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும், இந்த அமைச்சரவை மோடியின் தலைமையில் இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச்செல்லும். இன்னும் பல வெற்றிகளை பல மாநிலங்கள் குவிக்க இருக்கின்றன. தமிழகம் இன்னும் அதிகமகா பலம் பெற இருக்கிறது. தமிழகம் பலம் பெற பலம் பெற இங்கிருந்து அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்றார்.
தொடர்ந்து, தமிழத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஸ்டாலின் தான் கையெழுத்துப்போட்டார் என்று கூறிய அவர், மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதுவாக இருந்தாலும், மக்களுக்கு துன்பம் தரக்கூடிய திட்டம் எதுவாக இருந்தாலும், மக்களின் ஒப்புதல் இல்லாத திட்டம் எதுவாக இருந்தாலும் அதனை இந்த அரசு ஆதரிக்கப்போவதில்லை.
தவறான பிரசாரங்கள் தான் முன்னெடுக்கப்படுகிறது. எதோ, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறையில்லை என்பது போல் தோற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு தான் பாஜக இருக்கிறது. பல நல்லத்திட்டங்களை கொண்டுவருவோம், அதன் அடிப்படையில் எங்களது பணி இருக்கும் என்றார்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், அவர் அமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு, தற்போது நான் அது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. அனைத்துமே கட்சி தலைமையும், பிரதமரும் முடிவு எடுக்கவேண்டியது என்று அவர் கூறினார்.