This Article is From Dec 17, 2018

‘ராகுல் பிரதமராக வேண்டும்’ என ஸ்டாலின் சொல்லியதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பா..!?

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியிருந்தார்

‘பாசிச பாஜக ஆட்சியை ஒழிக்கும் திறன் ராகுல் காந்திக்கு உள்ளது. அவரது கரங்களை நாம் வளப்படுத்துவோம். நம் நாட்டை காப்பாற்றுவோம்’ என்று பேசினார் ஸ்டாலின்

Chennai:

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியிருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

நேற்று சென்னையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்ட பல தேசிய அளவிலான தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், ‘பாசிச பாஜக ஆட்சியை ஒழிக்கும் திறன் ராகுல் காந்திக்கு உள்ளது. அவரது கரங்களை நாம் வளப்படுத்துவோம். நம் நாட்டை காப்பாற்றுவோம்' என்று பேசினார்.

ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ், ஃபரூக் அப்துல்லாவின் தேசிய கான்ஃபெரன்ஸ் கட்சி, லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி தெரிவித்திருப்பதாக நமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

காங்கிரஸ் உட்பட, அதனுடன் தோழமையாக இருக்கும் அனைத்துக் கட்சிகளும், ‘எதிர்கட்சிகள் சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்..?' என்ற கேள்வியைத் தொடர்ந்து தவிர்த்து வந்தனர். ஆனால் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக வரவே, தற்போது, மற்ற எதிர்கட்சிகள் காங்கிரஸுக்கு சார்பாக மாறி வருகின்றன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணியை உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் இந்த முயற்சிக்கு தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் ஒத்துழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸுக்கு சார்பான நிலைபாட்டை எடுக்கும் எனப்படுகிறது.

சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த கான்ஷியாம் திவாரி, “இது குறித்து நாங்கள் முன்னரே கூறியது போல, 2019 தேர்தல் தான் முக்கியம். அதில் வெற்றி பெறுவது தான் முக்கியம். யார் பிரதமர் வேட்பாளர் என்பதை தேர்தலுக்கு முன்னர் முடிவு செய்யக் கூடாது. தேர்தலுக்குப் பின்னரே முடிவு செய்யப்பட வேண்டும்” என்றார் திட்டவட்டமாக.

அவரைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் லங்கா தினகரிடம் இது குறித்து கேட்டபோது, “2019 தேர்தலுக்குப் பின்னர் தான் யார் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ்தான் பிரதான எதிர்கட்சி என்பதால், ராகுல் காந்தி தான், அந்தப் பதவியைப் பெற அதிகம் வாய்ப்பிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில், காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்கட்சிகளின் சந்திப்பில், 21 கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் மாயாவதி, மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. அதேபோல இன்று நடக்கும் 3 மாநில முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகளிலும் அகிலேஷ், மம்தா, மாயாவதி ஆகியோர் பங்கெடுக்கப் போவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், எதிர்கட்சிகள் ஒன்றாக திறண்டு வந்து பாஜக-வை எதிர்ப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

.