12 துப்பாக்கிகள், 100 போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
ஹைலைட்ஸ்
- விஐபி-க்கள் மீது பொது இடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்
- கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்துள்ளார்கள்
- ரிமோட் கன்ட்ரோல் வெடிகுண்டு, தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டம்
New Delhi: டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படவிருந்த பயங்கரவாத தாக்குதல் திட்டத்தை தேசிய புலனாய்வு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டதுடன், துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஈர்ப்பு காரணமாக இந்தியாவில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில், டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் மீரட் அம்ரோஹா, லக்னோ உள்ளிட்ட 17 இடங்களில் சோதனை நடத்தினர். அவர்களில் 16 பேர் சிக்கினர். விசாரணை நடத்தப்பட்டதில் 10 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.
மீதம் உள்ளவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் முடிவில் நாட்டுத் துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டுகள், தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் ஆடைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
ரூ. 7.5 லட்சம் பணம், டைம் பாம்கள், வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் அனைவரும் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை நோட்டமிட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.