இதுவரை உலகளவில், 5,300-க்கும் அதிகமானோர் கொரோனா நோய் தொற்றால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
London: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, தங்களது தீவிரவாதிகள், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பாவுக்குச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இது குறித்து ‘தி சண்டே டைம்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ‘அல்-நபா' என்னும் செய்திக்குறிப்பில், தங்களது தீவிரவாதிகளுக்குப் புதிய உத்தரவுகள் போட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில்தான், ‘தீவிரவாதிகள் கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான ஐரோப்பாவுக்கு யாரும் போகக் கூடாது' என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
அதேபோல, தங்கள் தீவிரவாதிகள் யாருக்காவது கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தால் அவர்கள், ஒரே இடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு.
ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “யாரெல்லாம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்களோ, அவர்கள் ஐரோப்பாவுக்குச் செல்லக் கூடாது. யாருக்கெல்லாம் நோய்த் தொற்று உள்ளதோ அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வேறு எங்கும் போகக் கூடாது. கொட்டாவி விடும்போது தும்மலின் போதும் வாயை மூட வேண்டும். கைகளையும் அடிக்கடி கழுவிக் கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
செய்திக் குறிப்பில் மேலும், “இந்த நோய் ஒரு பிளேக். எந்த ஒரு நோயும் தானாக மண்ணில் வந்துவிடாது. கடவுள் யாரைத் தண்டிக்க விரும்புகிறாரோ அவர்களையே தாக்கும்,” என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
சமீப காலமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல இடங்களைப் பறிகொடுத்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் பல இடங்களில் அந்த அமைப்பு இன்னும் வேரூன்றியே உள்ளது. ஐரோப்பாவில் மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஈராக்கில் இதுவரை கொரோனாவால், 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் இறந்துள்ளனர்.
ஐரோப்பாவில்தான், தற்போது உலக அளவில் அதிக பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசுகள், மக்கள், பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தும் அடுத்தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை உலகளவில், 5,300-க்கும் அதிகமானோர் கொரோனா நோய்த் தொற்றால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.