This Article is From Feb 19, 2020

சென்னையில் சிஏஏவுக்கு எதிராக நடந்த இஸ்லாமியர்களின் போராட்டம் நிறைவு!

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே சென்னை கடற்கரை சாலையில் திரண்டதால், அங்கு பதற்றம் நிலவியது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

சென்னையில் சிஏஏவுக்கு எதிராக நடந்த இஸ்லாமியர்களின் போராட்டம் நிறைவு!

சுமார் 2 மணி நேரமாக நடந்த போராட்டம் நிறைவு பெற்றது.

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டம் நிறைவடைந்தது. சட்டமன்றத்தை முற்றுகையிட உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் கலைந்து சென்றதாக இஸ்லாமிய அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன. 

முன்னதாக, கடந்த 14ம் தேதி குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதைதொடர்ந்து போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. 

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் தீவிரமானது. தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்தன. 

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தன. 

இதையடுத்து, இஸ்லாமியர்களின் இந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனுமதியளிக்கப்படாத போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதி கிடையாது என்று கூறி, மார்ச் 11-ம்தேதி வரையில் போராட்டம் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 

இந்த சூழலில் திட்டமிட்டபடி தமிழக சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அணி திரண்டனர். 

தொடர்ந்து, அடையாள அட்டை, தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், நீதிமன்றம் தடை வித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்லவில்லை என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்தது. 

இதையடுத்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்தது. சுமார் 2 மணி நேரமாக நடந்த இந்த போராட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பேரணியில் பங்கேற்க வந்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். 

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே சென்னை கடற்கரை சாலையில் திரண்டதால், அங்கு பதற்றம் நிலவியது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

மேலும், சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணிக்க போலீசார் சிறப்பு ஏற்பாடுகள் செய்து கண்காணித்து வந்தனர். 

.