This Article is From Dec 17, 2019

இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா? ஸ்டாலின் ஆவேசம்

சர்வாதிகார சட்டங்களை வரிசையாக அரங்கேற்றுவீர்கள் என்றால், அதைப் பார்த்துக் கொண்டு கைகட்டி, வாய்பொத்தி இருக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; இது தந்தை பெரியாரின் கூட்டம்! அறிஞர் அண்ணாவின் கூட்டம்! தலைவர் கலைஞரின் கூட்டம்!

இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா? ஸ்டாலின் ஆவேசம்

இஸ்லாமியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? ஈழத்தமிழினம் மட்டும் பாவம் செய்த இனமா?

குடிமக்கள் என்றால் இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று காலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது, 2014-ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி உதயமானது. உதயமான பா.ஜ.க ஆட்சி 5 வருடம் இந்தியாவை முழுமையாக ஆண்டுவிட்டு, அதற்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 

சாதாரண வெற்றி அல்ல; மிக பெரும்பான்மையான நிலையில், மிருக பலம் என்று சொல்வார்களே, அந்த பலத்தோடு மீண்டும் மோடியின் தலைமையில் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் அவர்கள்தான் ஆளப்போகிறார்கள். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இந்திய நாட்டு மக்களை ஆளுகிறார்களா? மக்களுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? என்று பார்த்தால் இல்லை என்பதைத்தான் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் இந்திய நாட்டு மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இந்திய நாட்டு மக்களை பற்றி கவலைப்பட்டிருந்தால், இந்நேரம் பொருளாதாரத்தை, வேளாண்மைத் துறையை வளர்த்திருப்பார்கள். 

ஏற்றுமதியை பெருக்கியிருப்பார்கள். புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இருப்பார்கள். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்பார்கள். அவர்கள் எதையும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அதனால் எதையும் சொல்ல முடியாத நிலையில், ஒரு கொடுமையான ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியா என்பது பல இனங்களைச் சார்ந்தவர்கள்; பல மொழிகளைப் பேசுபவர்கள்; பல்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு.

நாம் பல 100 ஆண்டுகளாக எந்த வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். அந்த ஒற்றுமையில் நஞ்சை கலக்கும் ஆட்சியாக பா.ஜ.க.,வின் ஆட்சி நடைபெற்று வருகிறது என இந்த கண்டன கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்ட விரும்புகிறேன்.

அவசர அவசரமாக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்கள். குடியுரிமை சட்டம் என்றாலே அதன் உண்மையான பொருள் வெளிப்படையாக தெரியும். குடிகளுக்கு உரிமை வழங்கும் சட்டம் என்று அதற்கு பொருள். குடியுரிமைச் சட்டம் என்று பெயர் வைத்துக்கொண்டு குடிகளின் உரிமையை இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சி பறித்துக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் இது குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? என்று நான் இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். குடிமக்கள் என்றால் இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா? எதற்காக இந்த ஓரவஞ்சனை? இஸ்லாமியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? ஈழத்தமிழினம் மட்டும் பாவம் செய்த இனமா?

இதைக் கேட்பது எங்களது உரிமை. பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மக்கள் விரோத - ஜனநாயக விரோத - சர்வாதிகார சட்டங்களை வரிசையாக அரங்கேற்றுவீர்கள் என்றால், அதைப் பார்த்துக் கொண்டு கைகட்டி, வாய்பொத்தி இருக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; இது தந்தை பெரியாரின் கூட்டம்! அறிஞர் அண்ணாவின் கூட்டம்! தலைவர் கலைஞரின் கூட்டம்!

மத்திய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்த வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் எத்தனையோ இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவதில்லை. திடீரென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

.