வரவேற்பை ஏற்கும் இஸ்ரோ தலைவர்.
New Delhi: இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு விமானத்தில் அளிக்கப்பட்ட திடீர் வரவேற்பும், பாராட்டும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 2 திட்டத்தை கடந்த மாதம் செயல்படுத்தியது. திட்டம் முழு வெற்றி அடையாத நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த திட்டத்தை வழி நடத்திய இஸ்ரோ தலைவர் கே.சிவன், சந்திரயான் 2 முழு வெற்றி அடையாதபோது கண்கலங்கி அழுதார். இந்த காட்சி நாடு முழுவதும் அவருக்கு பெரும் அனுதாபத்தையும், மரியாதையையும் அளித்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் இண்டிகோ விமானத்தில் பயணமாக சென்றுள்ளார். விமானத்திற்குள் அவர் ஏறியதும், அவருக்கு பணியாளர்களும், பயணிகளும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
WATCH:
‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவரை வரவேற்கிறோம்' என்று விமான மைக்கில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பணியாளர்களும், பயணிகளும் சிவனுடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் அவருக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த அன்பையும், மரியாதையையும் சிவன் ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறு அந்த வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது.
தற்போது வைரலாகி வரும் வீடியோக்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது கோளாறு ஏற்பட்டது. இந்த லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.