This Article is From Dec 05, 2018

வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டா தரும் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தம்

விண்ணில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜிசாட்-11 செயற்கைகோள் இந்தியாவின் மிகப்பெரும் சொத்து என்று இஸ்ரோ கூறியுள்ளது.

ஜிசாட் - 11 செயற்கைகோளின் எடை 5,854 கிலோ

Bengaluru:

இன்டர்நெட் பிராட்பேண்ட் சேவைக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் ஜிசாட் -11 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்திப்பதன் காரணமாக அதன் சேவையை மேம்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை நிறைவு செய்வதற்காக மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் விநாடிக்கு 100 ஜி.பி. டேட்டாவை பிராசஸ் செய்வது என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்காக உள்ளது.

இதனை எட்டிப்பிடிக்கும் முயற்சியின் முதல்படியாக தற்போது ஜிசாட் 11 என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இந்த செயற்கைகோள் வினாடிக்கு 16 ஜி.பி. டேட்டாவை பிராசஸ் செய்வதற்கு தேவையான வேலைகளை செய்யும்.

இந்த செயற்கைகோளை தென் அமெரிக்காவில் உள்ள ஃப்ரென்ச் கயானா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2:07 -க்கு விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தியுள்ளனர். செலுத்தப்பட்ட 33-வது நிமிடத்தில் செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது-

இஸ்ரோ அனுப்பியிருக்கும் செயற்கைகோள்களில் இதுதான் அதிக எடை கொண்டது. சுமார் 5,854 எடையை இந்த செயற்கைகோள் கொண்டுள்ளது. அதேநேரம் இஸ்ரோ உருவாக்கியுள்ள செயற்கைகோள்களில் இதுதான் அதிக சக்தி கொண்டது.

இந்தியாவின் மிகப்பெரும் சொத்தாக இது கருதப்படும். நாட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் இந்த செயற்கைகோள் கண்காணித்து விடும். விநாடிக்கு 16 ஜி.பி. டேட்டாவை இந்த செயற்கைகோள் நாட்டிற்கு அளிக்கும்.

வினாடிக்கு 100 ஜிபி டேட்டாவை அளிப்பதுதான் டிஜிட்டல் இந்தியாவின் இலக்கு. அதனை எட்டுவதற்காக ஏற்கனவே 2 செயற்கைகோள்களை அனுப்பி விட்டோம். இது 3-வது செயற்கைகோள்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் அதிவேக டேட்டாவை இந்த செயற்கைகோள் அளிக்கும். பாரத்நெட் திட்டத்தின் கீழ், அனைத்து கிராம பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு இந்த செயற்கைகோள் உதவும். இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

.