Kalamsat V2: 44.4 மீட்டர் நீளம் கொண்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட் செயற்கைகோளை தாங்கிச் செல்லும் காட்சி
New Delhi: மாணவர்கள் உருவாக்கிய உலகிலேயே மிகவும் எடை குறைந்த செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இஸ்ரோ நேற்றிரவு விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த செயற்கைகோளை ''ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'' என்ற தனியார் அமைப்பு மாணவர்கள் மூலம் தயாரித்துள்ளது.
இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோ எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. நாற்காலியை விட மிகவும் எடை குறைந்தது இந்த செயற்கைக்கோள். இதன் எடை 1.26 கிலோ கிராம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மொத்தம் 12 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இந்த செயற்கைகோள் 6 நாட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான ஃபார்முலாவை கடந்த 6 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கின்றனர்.
இந்த செயற்கைகோளுக்கு கலாம்சாட் வி2 என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்த செயற்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் இந்த சாதனையை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ''எங்களது விண்வெளி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு வெற்றிகரமான செயலை அவர்கள் செய்திருக்கின்றனர். இந்தியாவின் திறமை மிக்க மாணவர்களால் கலாம்சாட் உருவாக்கப்பட்டுள்ளது.'' என்று கூறியுள்ளார்.