IT investigates Vijay: இந்த தொகை, அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடத்தில் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
IT investigates Vijay: கடந்த இரண்டு நாட்களாக, தமிழக திரைக் களத்திலும் அரசியல் களத்திலும் பேசு பொருளாக மாறியிருப்பது, விஜய் வீடுகளில் செய்யப்பட்ட வருமான வரித்துறை சோதனையும், விஜய்யிடம் மேற்கொள்ளப்பட்ட ஐடி அதிகாரிகள் விசாரணையும்தான். சமீப காலமாக தனது திரைப்படங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் பேசி வரும் விஜய் வீட்டில், திடீர் ஐடி ரெய்டு, பலரையும் ஏன் என்று யோசிக்க வைத்துள்ளது.
விஜய் வீடுகளில் மட்டுமின்றி, ‘பிகில்' திரைப்படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்கள், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 77 கோடி கைப்பற்றப்பட்டது. இந்த தொகை, அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடத்தில் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் முழுப்பக்க அறிக்கையையும் வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரூ.300 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை, மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி பல கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்கள், ஒரு பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டாலும், எதுவும் விஜய் வீடுகளில் சிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். அவரிடம், “பிகில் திரைப்படத்தில் பெறப்பட்ட சம்பளம் மற்றும் சமீபத்தில் வாங்கப்பட்ட அசையா சொத்துகள்” பற்றித்தான் விசாரிக்கப்பட்டது என்று வருமான வரித் துறை அறிக்கையே சொல்கிறது. பிறகு எதற்கு இவ்வளவு பெரிய சோதனை நடத்தப்பட்டது என்கிற கேள்வி எழுகிறது.
குறிப்பாக, நேற்று முன்தினம் கடலூரில் ‘மாஸ்டர்' திரைப்படத்திற்காக ஷூட்டிங் செய்து வந்த விஜய்யை, வருமான வரித் துறை அதிகாரிகள், வலுக்கட்டாயமாக அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததாக தகவல் சொல்லப்படுகிறது. இந்த தகவல்தான் விஜய் ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.
விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கொண்டு வந்த ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டில் இந்தியா திட்டங்களை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இருக்கும். அதேபோல, ‘சர்கார்' திரைப்படத்தில் மாநில அதிமுக அரசின் திட்டங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருக்கும். மேலும், அதிமுக அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து மேடைகளில் சூசகமாக பேசி வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில்தான் இந்த ஐடி ரெய்டு நடந்துள்ளது.