This Article is From Jan 08, 2019

பொருளாதாரத்தை வைத்து இடஒதுக்கீடு வழங்குவது முறையானது அல்ல: தம்பிதுரை கடும் எதிர்ப்பு!

இதைத்தொடர்ந்து,10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது

பொருளாதாரத்தை வைத்து இடஒதுக்கீடு வழங்குவது முறையானது அல்ல: தம்பிதுரை கடும் எதிர்ப்பு!

பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு அதிமுக சார்பில் மக்களவையில் கடும் எதிர்ப்பை தெரிவித்த தம்பிதுரை, பிரதமர் மோடி உறுதியளித்தப்படி, நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே இருக்க மாட்டார்களே என்று கேள்வி எழுப்பினார்.

பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலோட் மசோதாவை தாக்கல் செய்தார். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகுக்கும் மசோதா வரலாற்றுச் சிறப்புமிக்கது என அமைச்சர் தெரிவித்தார். இந்த மசோதா நீதிமன்ற சோதனையையும் கடந்து வெல்லும் என்று அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது அரசியல் காரணத்திற்காக அல்ல என்றும் அனைத்து தரப்பு மக்களுக்குமான வளர்ச்சி என்ற இலக்கை பூர்த்தி செய்ய இந்த மசோதா உதவும் என்றார்.

இந்த மசோதாவை தாங்கள் ஆதரிப்பதாகவும், அதேசமயம் இந்த மசோதா கொண்டுவரப்பட்ட விதம் சரியில்லை என்று காங்கிரஸ் தரப்பில் கே.வி.தாமஸ் கருத்து தெரிவித்தார். எனவே இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு மசோதாவிற்கு அனுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து,10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,

நாட்டில் சாதியம் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் அனைவருக்குமான நீதி நிலைநாட்டப்படும். தமிழகத்தில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வசிக்கிறார்கள். பிரதமர் அறிவித்தபடி ரூ.15 லட்சம் வழங்கினால் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது.?

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முன்னேற்றமடைய பல திட்டங்கள் இருக்கும்போது இடஒதுக்கீடு ஏன்? படித்திருந்தும் அவமதிக்கப்பட்டதால் தான் அம்பேத்கர் தலித்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரினார். சமூகத்தில் பொருளாதாரத்தை வைத்து இடஒதுக்கீடு வழங்குவது முறையானது அல்ல என்றார்.

மேலும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இதுவரை மத்திய அரசு என்ன செய்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் பலனளிக்கவில்லை என்றால் தான் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார்.

.