IT Questions Vijay: விஜய், கடைசியாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்
Chennai: IT Questions Vijay: நேற்றைய தினம், வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் விஜய்க்கு ‘மாஸ்டர்' படப்பிடிப்புத் தளத்திற்கே வந்து சம்மன் அளித்துள்ளனர் ஐடி அதிகாரிகள். இந்நிலையில் விஜய்யிடம் எது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய், கடைசியாக ‘பிகில்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்த ஏ.ஜி.எஸ் நிறுவன அலுவலகங்கள் மற்றும் அந்நிறுவனத்தினருக்குச் சொந்தமான வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதேபோல பிரபல திரைப்பட பைனான்சியர், அன்புச்செழியனுக்குச் சொந்மான இடங்களிலும் நேற்று ஐடி ரெய்டு நடந்தது. அதில், அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடத்தில் 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாம். இதைத் தொடர்ந்துதான் விஜய்யிடம் ஐடி அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விஜய்யிடமும் இந்த 65 கோடி ரூபாய் விவகாரம் குறித்துதான் விசாரிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
அன்புச்செழியனுக்கும் விஜய்க்கும் இடையில் சட்டத்துக்குப் புறம்பான பணப் பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்று ஐடி அதிகாரிகள் சந்தேகிக்கன்றனராம். இன்றும் இது குறித்து விஜய்யிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்படுகிறது.
நேற்று கடலூரில் நடந்து வந்த ‘மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யை, வருமான வரித் துறை அதிகாரிகள், சென்னைக்கு அழைத்து வந்ததாக ஒரு தகவல் உலவிவந்தது. அதை மறுக்கும் அதிகாரிகள், “நாங்கள் அதைப் போல எதையும் செய்யவில்லை. விஜய்தான், படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே கிளம்பினார். நேற்று சென்னையில் இருக்கும் அவரது வீட்டில் சோதனை நடந்து வந்தது. அப்போது அவர் மனைவி அங்கிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் மிகப் பெரிய நட்சத்திரம் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களின் மூத்த அதிகாரிகள், அவரை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தெளிவாக சொல்லியிருந்தார்கள்,” என்று கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கும் விஜய்க்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, 2017 ஆம் ஆண்டு வெளிவந்த, ‘மெர்சல்' திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி' குறித்தான காட்சிகளுக்கு பாஜக கடும் விமர்சனங்களை முன்வைத்தது. ஜிஎஸ்டி குறித்தும் ‘டிஜிட்டல் இந்தியா' திட்டம் குறித்தும் மெர்சல் படத்தில் தவறான தகவல்கள் சொல்லப்படுவதாக குற்றம் சாட்டி, அந்தக் காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்தியது பாஜக. இந்நிலையில் இன்று விஜய்யிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது கவனம் பெற்றுள்ளது.
நேற்று மட்டும் ஏஜிஎஸ், அன்புச்செழியனுக்குச் சொந்தமான 38 இடங்களில் வருமான வரித் துறை சோதனை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.