This Article is From Feb 07, 2020

2 நாட்களாக நடந்த ஐடி ரெய்டு; எதற்காக இந்த திடீர் சோதனை; கொதிப்பில் விஜய் ரசிகர்கள்!!

IT Questions Vijay: மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 77 கோடி கைப்பற்றப்பட்டது

2 நாட்களாக நடந்த ஐடி ரெய்டு; எதற்காக இந்த திடீர் சோதனை; கொதிப்பில் விஜய் ரசிகர்கள்!!

IT Questions Vijay: சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

IT Questions Vijay: நடிகர் விஜயின் சாலிகிராமம் மற்றும் பனையூர் வீட்டில் 23 மணிநேரமாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை நேற்று மாலை நிறைவுபெற்றது. இந்த சோதனையின்போது விஜயின் மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய்யிடமும் கடந்த 2 நாட்களாக பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மொத்த சம்பவத்தில் விஜய் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் நடத்தப்பட்ட விதத்தால் மிகவும் கொதிப்பில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

கடந்த தீபாவளியன்று வெளியான விஜய் நடித்த ‘பிகில்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இதில் தயாரிப்பாளர் தரப்பான ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு கிடைத்த வருமானம், நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

முதலில் நேற்று முன்தினம் நெய்வேலியில் நடைபெற்ற ‘மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற அதிகாரிகள் அங்கு விஜய்க்கு சம்மன் அளித்தனர்.

இதையடுத்து விஜய் சென்னைக்கு வந்ததுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதேபோன்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தப்பட்டன. 

மொத்தம் 38 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 77 கோடி கைப்பற்றப்பட்டது. சோதனை தொடர்பாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரூ. 300 கோடி வரையில் வருமானம் மறைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்ட சோதனை குறித்த விவரங்களை, வருமான வரித்துறை அறிக்கையாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் விஜய் நடத்தப்பட்ட விதத்தால் அவரது ரசிகர்கள் கொதிப்பில் இருக்கிறார்களாம். இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர், ரவிராஜா, வெளியிட்டுள்ளதாக சொல்லப்படும் அறிக்கையில், “விஜய்யிடம், வருமானவரித்துறையினர் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதியை நடத்துவதுபோல் ‘மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று விஜய்யை அழைத்து வந்து விசாரிப்பது ஏன்? அவர் நித்யானந்தாவா? இல்லை விஜய் மல்லையாவா? இதுபோன்ற விசாரணை வேறு எந்த நடிகருக்காவது நடந்துள்ளதா? மாநிலம் முழுவதும் ரசிகர்கள் கொந்தளித்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களிடம் பொறுமை காக்கும்படி கூறியுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளாராம்.

.