This Article is From Mar 30, 2019

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு!

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட குழு அதிகாலை 4 மணி முதல் அவரது வீட்டை சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு!

காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் உள்ளிட்ட பரிசுபொருட்கள் துரைமுருகன் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், நேற்று இரவு 10மணி அளவில் துரைமுருகன் வீட்டுக்கு வந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்தனர்.

உடனடியாக துரைமுருகனின் வீட்டுக்கு வந்த அவரது வழக்கறிஞர்கள் இது சட்டத்துக்கு புறம்பான சோதனை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சோதனைக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகளில் முரண்பட்ட தகவல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது வருமானவரித் துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள், அடையாள அட்டையில் ஒன்றும் அவர்கள் கூறுவது ஒன்றுமாக இருந்துள்ளது. இதனால், இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், சோதனை நடத்த இரவு 10.30 மணிக்கு வந்த அதிகாரிகள் 4 மணி நேரம் நீடித்த வாக்குவாதத்துக்குப் பின் அதிகாலையில் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். கூடுதலாக மேலும் 3 அதிகாரிகள் துரைமுருகன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து தகவல்கள் வெளியானதும், திமுக தொண்டர்கள், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அவரது வீட்டு வாசலில் திரண்டு வருகின்றனர்.

.