This Article is From Oct 03, 2018

‘ரஃபேல் ஒப்பந்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!’- விமானப் படை தளபதி கருத்து

விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் தனாவ், ‘இந்திய அரசோ, விமானப் படையோ ரஃபேல் விவகாரத்தில் பார்ட்னரை தேர்வு செய்வதில் சம்பந்தப்படவில்லை’ என்றுள்ளார்

ரஃபேல் விமானங்கள், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், தளபதி சிங்

ஹைலைட்ஸ்

  • ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விமானப் படையிடம் கருத்து கேட்கப்பட்டது, சிங்
  • மத்திய அரசு, விமானப் படை, பார்ட்னரை தேர்வு செய்யவில்லை, தளபதி சிங்
  • ரஃபேல் ஒப்பந்தத்தால் நமக்கு சாதகங்கள் அதிகம், தளபதி சிங்
New Delhi:

இந்திய விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் தனாவ், ‘இந்திய அரசோ, இந்திய விமானப் படையோ ரஃபேல் விவகாரத்தில் பார்ட்னரை தேர்வு செய்வதில் சம்பந்தப்படவில்லை’ என்று கருத்து தெரிவித்துள்ளார். 

ரஃபேல் விவகாரம் பூதாகரம் எடுத்து வரும் நிலையில், விமானப் படை தளபதியின் கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஃபேல் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தளபதி பிரேந்தர் சிங், ‘டசால்ட் நிறுவனம் தான், அவர்களுக்கு எந்த பார்ட்னர் வேண்டும் என்பதை தேர்வு செய்தது. இந்திய விமானப் படையோ, இந்திய அரசோ அதில் தலையிடவில்லை. ரஃபேல் விமானங்கள், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரஃபேல் விமானங்களில் இருக்கப் போகும் தொழில்நுட்பத்தால் நமக்கு நிறைய சாதகங்கள் இருக்கும்’ என்று பேசியுள்ளார். 

8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலைன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. 36 ரஃபேல் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான முறையற்றப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது. 

கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மிக அதிக அளவில் பணம் கொடுத்து விமானங்களை வாங்க அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் மூலம் அவர் அனில் அம்பானிக்கு உதவி புரிய பார்க்கிறார். ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தரப்பு, ‘எந்த வித ஆதாரமுமின்றி காங்கிரஸ் தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பொய்களை சொல்லி வருகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தை போடுவது குறித்து முதன் முதலில் பேச ஆரம்பித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு தான்’ என்று பதிலடி கொடுத்தது. 

இப்படி இரு தரப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலண்டே, ‘இந்திய அரசு தான், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து வேலை செய்யுமாறு சிபாரிசு செய்தது. இது குறித்து எங்களுக்கு எந்த தேர்ந்தெடுக்கும் உரிமையும் தரப்படவில்லை’ என்று பகீர் தகவலை தெரிவித்தார். 

.