ஒரு தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிர் துருவ கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ளது அரிதான நிகழ்வுதான்
Chennai: வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்க உள்ளன. இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக - அதிமுக சார்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் களமிறங்க உள்ளனர்.
குடும்ப அரசியலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு கட்சியிலும் களமாடுவது தமிழகத்துக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால், ஒரு தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிர் துருவ கட்சிகள் சார்பில் போட்டியிட உள்ளது அரிதான நிகழ்வுதான்.
ஆண்டிப்பட்டியில் இந்த முறை திமுக சார்பில் ஏ.மகாராஜனும், அதிமுக சார்பில் அவரது இளைய சகோதரர் ஏ.லோகிராஜனும் பலப்பரீட்சை செய்ய உள்ளனர்.
இது குறித்து லோகிராஜன் கூறுகையில், ‘இது மிகவும் மதிப்புமிக்கத் தொகுதி. காரணம், இங்குதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது, இங்கு நான் வெற்றி பெறுவதற்கான சூழல் நன்றாக உள்ளது. அதிமுக-வுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
அரசியல் பாதையும் குடும்பப் பாதையும் வெவ்வேறாகும். நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவன். ஆகவே, வெகு நாளைக்கு என் அண்ணனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளேன். தேர்தலைப் பொறுத்தவரை, தொகுதியில் இருக்கும் அனைவரும் எனது உடன் பிறப்புகள்தான்' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.