குமரி மாவட்ட அரசியல் பற்றி தினகரனுக்கு தெரியாது என பொன்னார் கூறியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் பேசுவதை வெளியே கொண்டு வருவது அநாகரீகம் என்பதை டிடிவி தினகரன் உணர்ந்து கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிடிவி தினகரன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த போதும், குமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த தனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான் என உறுதியாக கூறினார்.
இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியின் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
குமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று நான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை. கருப்பு முருகானந்தம் அந்த ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு தினகரனுடன் நல்ல நட்பு உண்டு. பல விஷயங்களுக்கு அவரிடம் பேசி இருக்கலாம்.
குமரி மாவட்ட அரசியல் பற்றி தினகரனுக்கு தெரியாது. என்னிடம் கேட்டிருந்தால், கன்னியாகுமரி தொகுதியில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறி இருப்பேன்.
தனிப்பட்ட முறையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பழகுவது உண்டு. சமீபத்தில் அவர் கட்சி தொடங்கிய பின்பு நான் சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பேசுவதை வெளியே கொண்டு வருவது அநாகரீகம் என்பதை தினகரன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.