எங்கள் இருவரது கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது, முதல்வர் குமாரசாமி
New Delhi: கர்நாடகாவில் இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இடைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மககளவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.
மொத்தம் இருக்கும் 5 இடங்களில் காங்கிரஸ் - மஜத கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவமுகா தொகுதியில் மட்டும் தான் பாஜக வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பேசியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
இடைத் தேர்தலில் அடைந்த மாபெரும் வெற்றி குறித்து குமாரசாமி, ‘இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் எங்களுக்கு மேலும் உத்வேகம் கிடைத்துள்ளது. காங்கிரஸுடன் எங்கள் கூட்டணி, குறுகிய காலம் தான் இருக்கும் என்று பாஜக தொடர்ந்து சொல்லி வந்ததற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சிறந்த பதிலடியாக இருக்கிறது.
எங்கள் இருவரது கூட்டணியும் மிகவும் வலிமையாக இருக்கிறது. அடுத்த வரவுள்ள லோக்சபா தேர்தலில் இப்போது தோல்வியடைந்த சிவமுகா தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எங்கள் கூட்டணி குறித்து பாஜக தொடர்ந்து கேலி செய்து வந்தது. ஆனால், மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். எங்கள் கூட்டணி குறித்து பலர் தவறாக பேசினர். அவர்களுக்கெல்லாம் இது சரியான பதிலாக இருந்திருக்கும். நாங்கள் இன்னும் முனைப்போடு திட்டம் போட்டிருந்தால், சிவமுகா தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம்' என்று கூறியுள்ளார்.