”பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது” - வேல்முருகன் விமர்சனம்
”பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது” என நடிகர் ரஜினிகாந்த் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி
இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். போலீசாரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.
போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இவ்விவகாரம் மேலும் பெரிதாவதை தடுக்க வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில்
இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறும்போது, ”பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது” இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறிய ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா?
உண்மையில் நீங்கள் இஸ்லாமிய மக்களை மதித்தால், மதச்சார்பின்மை நாடாக அண்ணன் தம்பியாக, மாமன் மச்சானாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கை முறை கொண்ட இந்த மண்ணில் நீடிக்க வேண்டும் என ரஜினி நினைத்தால் வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவைகள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார். அவர் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்த அவர், “இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை வந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்,” என்று அதிரடியாக கூறியிருந்தார்.
இதனிடையே, ரஜினியின் கருத்தை வைத்து தற்போது சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக #வீதிக்குவாங்க_ரஜினி என்ற ஹேஷ்டேக் ட்வீட்டர் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.