இவாங்காவும், அவரது கணவரும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்காவின் தனிச்செயலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டிரம்பும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
இவாங்காவின் தனிச்செயலராக இருப்பவர், அவருடன் கடந்த சில வாரங்களாக தொடர்பில் இருந்துள்ளார். இந்த தகவலை சி.என்.என்.செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
பாதிக்கப்பட்ட இவாங்காவின் தனிச் செயலருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இதைத்தொடர்ந்து இவாங்கா டிரம்ப் மற்றும் அவரது கணவர் ஜேர்டு குஷ்னர் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் செய்தி தொடர்பாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். 'திறைமை மிக்க இளம்பெண்ணான கேட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது. அவர் என்னுடன் தொடர்பில் இருக்கவில்லை. ஆனால் துணை அதிபர் பென்சை பலமுறை சந்தித்து பேசியுள்ளார்' என்று தெரிவித்தார்.
டிரம்பின் உடைகளை கவனிக்கும் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அடிக்கடி உடலின் வெப்ப அளவு சோதிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளை துணை அதிபர் மைக் பென்ஸ் துரிதப்படுத்தி வருகிறார். ஆனால் அவரே ஒரு மருத்துவமனைக்கு முக கவசம் அணியாமல் சமீபத்தில் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில நாட்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்ப், அரிசோனாவில் உள்ள மாஸ்க் தயாரிப்பு நிறுவனத்திற்கு முக கவசம் அணியாமல் சென்றது குறிப்பிடத்தக்கது.