"நான் முழுவதும் அரசியலிலிருந்து விலகவில்லை. எனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து இனி தெரியப்படுத்துவேன்""
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அதிமுக-வினர், சென்னை, மெரினா கடற்கரையில் இருக்கும் அவரது நினைவிடத்திற்கு அமைதிப் பேரணி மேற்கொண்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா (J Deepa) மற்றும் அவரது கணவர் மாதவன் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் தீபா, தன் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசியுள்ளார்.
“அதிமுகவோடு இணைந்து பணி செய்வதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவில் இணைப்பதற்குத் தயார் என்று வெளிப்படையாக சொல்லியும், அந்தப் பக்கத்தில் இருந்து எங்களுக்கு சரிவர பதில் வரவில்லை. அது மிகவும் வருத்தமளிக்கிறது. நான் முன்னர் செய்தியாளர்கள் சந்தித்து, தீபா பேரவையை அதிமுகவோடு இணைப்பேன் என்று சொன்னபோது, எனக்கு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு தேவைப்பட்டது.
அதனால்தான் யாரையும் சந்திக்காமல் இருந்தேன். நான் முழுவதும் அரசியலிலிருந்து விலகவில்லை. எனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து இனி தெரியப்படுத்துவேன்,” என்று அதிரடியாக பேசியுள்ளார் தீபா.
மேலும், “தற்போது செயல்பட்டு வரும் அதிமுக அரசு, மிகவும் மந்தமாக உள்ளது. சரியான அரசு நிர்வாகம் இல்லை,” என்று குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுப்பது குறித்துப் பேசிய தீபா, “ஜெயலலிதா என்பவர் ஒரு மிகப் பெரிய தலைவர். அவருக்கு நிறைய தொண்டர்கள் உள்ளனர். அவருக்கு ரத்த சொந்தமுடைய நாங்கள் இருக்கிறோம். அப்படி இருக்கையில், யாராவது படம் எடுக்க வேண்டுமானால் அவர்கள் எங்களிடத்தில் முதலில் வந்து பேச வேண்டும். அதுதான் முறை,” என்று விளக்கினார்.