பயங்கரவாதி சாஹித் தாஸின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Anantnag (Jammu and Kashmir): தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் 3 பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தப்பிய அந்த 3வது பயங்கரவாதி சாஹித் தாஸ் என்றும் கடந்த வாரம் 6 வயது சிறுவனை சுட்டுக்கொன்றவர் என்று நம்பப்படுகிறது.
வாகாமா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பழத்தோட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாஹித் தாஸ் மட்டும் தப்பிச்சென்றதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, சிஆர்பிஎஃப் வீரரும், 6 வயது சிறுவனும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாஹித் தாஸை தேடி வருகிறோம். வாகாமா கிராமத்தில் அவர்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்பைடியில், இன்று காலை, ராணுவமும், போலீசாரும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த வெள்ளக்கிழமை அனந்த்நாக்கில் பிஜ்பேரா பகுதியில் உள்ள பாதசாஹி பாலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கி கொண்டிருந்த 6 வயது சிறுவன் நிஹானையும், துப்பாக்கி தோட்டா துளைத்தது. இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, பயங்கரவாதிகள் இருசக்கர வாகனத்தில் வந்து, துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர் என்றனர். இந்த உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் தாக்குதல் நடத்திய அந்த பயங்கரவாதியின் புகைப்படத்தை
வெளியிட்டனர்.
முன்னதாக நேற்றைய தினம் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாஹைதின் அமைப்பை சார்ந்த பயங்கரவாதி உட்பட 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி மசூத் அகமத் பாத் உயிரிழந்ததை தொடர்ந்து, தோடா மாவட்டத்தை பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக போலீசார் அறிவித்தனர்.
மேலும், மாவட்டத்தில் எஞ்சியிருந்த கடைசி பயங்கரவாதி மசூத் தான் என்று பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு பெரிய வெற்றியை அடைந்ததாக காவல்துறை தெரிவித்தது.