This Article is From Nov 22, 2018

மெஹபூபா முஃப்தி மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் சட்டசபை கலைப்பு!

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி இன்று மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் சத்தியபாலிடம் கடிதம் அளித்த நிலையில், சட்டசபையை கலைப்பதாக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்

காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் ஆதரவு உள்ளதாக மெஹபூபா தெரிவித்துள்ளார்.

Srinagar:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைத்தது. முஃப்தி முகமது சையது முதலமைச்சராகவும், நிர்மல் குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

முஃப்தி முகமது உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதலமைச்சராக 2016, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். இதனையடுத்து, பிடிபி, பாஜக இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

அதனையடுத்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. மெஹபூபாவின் அரசும் கவிழ்ந்தது. ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்து விட்டது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. தற்போது நடைபெற்றுவரும் ஆளுநர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது. மேலும் வரும் டிசம்பர் 19 ஆம் தேதியுடன் 6 மாத காலம் முடிவடைய உள்ளது.

இதனால், காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மெகபூபா முப்தி மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் சத்தியபால் மாலிக்கிடம் கடிதம் கொடுத்தார்.

இந்நிலையில் ஆளுநர் சத்திய பால் மாலிக் காஷ்மீர் சட்டசபையை கலைப்பதாக உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய விதிகளின் அடிப்படையில் சட்டசபையை ஆளுநர் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.