ஜேக் மா அறக்கட்டளை மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Beijing: அலிபாபா ஆன்லைன் வர்த்தக தொழிலின் நிறுவனரும், சீனாவின் பெரும் பணக்காரருமான ஜேக் மா ரூ. 100 கோடி (14 மில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக வழங்கியுள்ளார்.
இந்த தொகை, ஜேக் மா அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 41 கோடி ரூபாய் பணம் சீன அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 2 மருந்து நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மீதத் தொகை மற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் சிகிச்சை பிரிவுக்கு அளிக்கப்படுகிறது. இந்த தகவலை சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோன்று பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம், கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவலையும் நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி அளித்துள்ள பேட்டியில், 'எங்களிடம் பல திறமை வாய்ந்த அறிவியலாளர்கள் உள்ளனர். எனவே, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்தினை எங்களால் கண்டுபிடிக்க முடியும் என்றும், அந்த மருந்து நீண்ட காலத்திற்கு பலன் அளிக்கும் என்றும் நம்புகிறோம்.' என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தாலும் அதற்கான தடுப்பு மருந்துகள் சந்தையில் கிடைக்க குறைந்த 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.