மக்கள் நலனையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு அரசும், அரசு ஊழியர்களும் தங்களின் நிலையிலிருந்து இறங்கி வர வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 9வது நாளாக நடந்து வருகிறது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இனி பணிக்கு திரும்பி வர அவகாசம் கொடுக்கப்படாது என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசும், தொழிற்சங்கங்களும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போராட்டம் தொடர்வதுடன், மக்கள் மற்றும் மாணவர்களின் பாதிப்பும் அதிகரித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் ஒருபிரிவினர் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக தலைமைச் செயலக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்போவதாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் செய்முறைத் தேர்வுகளும், இன்னும் சில வாரங்களில் எழுத்துத் தேர்வுகளும் தொடங்கவுள்ள நிலையில், போராட்டம் நீடித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அரசு நிர்வாகமும் முற்றிலுமாக முடங்கி விடும். மக்கள் நலனையும், மாணவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு அரசும், அரசு ஊழியர்களும் தங்களின் நிலையிலிருந்து இறங்கி வர வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை நல்லெண்ண அடிப்படையில் திரும்பப்பெற்று உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்.
தமிழக ஆட்சியாளர்களும் அதே நல்லெண்ண அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இரு தரப்புக்கும் ஏற்ற நாளில் பேச்சு நடத்தி சாத்தியமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.