This Article is From Jan 30, 2019

’95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்களா..?’- என்ன சொல்கிறது ஜாக்டோ-ஜியோ

அரசு சார்பில், ’95 சதவிகித ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டாகள்’ என ஒரு புள்ளி விவரம் அளிக்கப்பட்டது

’95% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்களா..?’- என்ன சொல்கிறது ஜாக்டோ-ஜியோ

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

ஹைலைட்ஸ்

  • 21-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
  • இதுவரை 1000 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
  • கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது, தமிழக அரசு திட்டவட்டம்

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்று அரசு சார்பில், '95 சதவிகித ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டாகள்' என ஒரு புள்ளி விவரம் அளிக்கப்பட்டது. அது குறித்து ஜாக்டோ-ஜியோ தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 

இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், '21-ம் தேதியிலிருந்து நடந்து வரும் ஸ்டிரைக்கை வாபஸ் வாங்க நாங்கள் தயார். எந்த புதிய கோரிக்கைகளையும் நாங்கள் முன் வைக்கவில்லை. எங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது. நாங்கள் ஒரேயொரு கோரிக்கையைத் தான் தமிழக அரசிற்கு வைத்தோம். முதல்வர் எங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று மட்டும்தான் சொன்னோம். அது ஜனநாக உரிமை. ஆனால், அதற்கு செவி மடுக்க அரசு தயாராக இல்லை. ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். முதல்வர் உங்களைச் சந்திக்க மாட்டார்' என்று சொல்லிவிட்டார்கள்' என்றார் ஆதங்கத்துடன். 

அப்போது, பத்ததிரிகையாளர் ஒருவர், ‘உங்களை அமைச்சர் ஜெயக்குமார் 3 முறை சந்தித்தாரே..?' என்றதற்கு, ‘வெறுமனே சந்தித்தால் மட்டும் போதுமா. எங்களின் நிலையைப் புரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டாமா. இடைக்கால நிவாரணமாவது கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லையே. ஜெயக்குமார் முதல்வர் இல்லையே. நாங்கள் முதல்வரைத்தானே சந்திக்க வேண்டும் என்கிறோம்' என்றார். 

தொடர்ந்து இன்னொரு செய்தியாளர், '95 சதவிகித ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டதாக கூறுகிறதே அரசு' என்றதற்கு, ‘அது உண்மையாக இருந்தால், ஏன் அரசு இன்னும் அச்ச நிலையிலேயே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராடுபவர்களை கேளுங்கள், உண்மை நிலை தெரியும்' என பதிலளித்தார். 


 

.