சென்னை உயர் நீதிமன்றம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை கட்டாயமாக பணிக்குத் திரும்புமாறு நேற்று உத்தரவிட்டது.
ஹைலைட்ஸ்
- 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
- பழைய ஓய்வூதியம் கோரி அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்
- இன்று தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து தெரிவித்துள்ளது அரசு
முன்னர் அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை கட்டாயமாக பணிக்குத் திரும்புமாறு நேற்று உத்தரவிட்டது. அதையும் பொருட்படுத்தாமல் ஆசிரயர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை, 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம். அவர்கள் 28 ஆம் தேதிக்கு முதல் பணி செய்ய ஆரம்பிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ‘வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். பணிக்கு வராதவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படாது' என்று எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார்.
இப்படி அடுத்தடுத்து எச்சரிக்கைகள் வந்த போதும், ஸ்டிரைக் தொடரும் என்று தெரிவித்துள்ளனர் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர். அரசு கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத வரையில் போராட்டம் தொடரும் என்று அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.