This Article is From Jan 26, 2019

‘விரைவில் நல்ல முடிவு!’- அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் குறித்து செங்கோட்டையன்

சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்திப்பு நடந்தது

‘விரைவில் நல்ல முடிவு!’- அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் குறித்து செங்கோட்டையன்

8 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

ஹைலைட்ஸ்

  • 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
  • தமிழகத்தில் மொத்தம் 13 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்
  • அதில் 8 லட்சம் பேர் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

முதல்வருடனான சந்திப்பு முடிந்ததை அடுத்து வெளியே வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘அனைத்துத் துறை அதிகாரிகள் முதல்வருடனான சந்திப்பில் கலந்து கொண்டார்கள். தற்போது நடந்து வரும் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார். உடனே ஒரு பத்திரிகையாளர், ‘அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயுமா..?' என்று கேட்டார்.

அதற்கு செங்கோட்டையன், ‘அது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம்' என்று கூறிவிட்ட இடத்தை காலி செய்தார்.

தமிழக அளவில் சுமார் 13 லட்சம் அரசு பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 8 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. 

நேற்று கல்வித்துறை முதன்மை செயலாளர், ‘இன்று நடக்கும் குடியரசு தின விழாவிற்கு அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு வராத நாட்களில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது' என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

அரசு தரப்பில் எப்படிப்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், ஊழியர்கள் சங்கம், ‘கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை வேலை நிறுத்தம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று உறுதியாக கூறியுள்ளது. 


 

.