பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் உயர் நீதிமன்ற தலையீடு காரணமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தது.
அவர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்தது.
இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினால் அடுத்த வாரம் பள்ளிகளில் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு பாதிக்கப்படும். மேலும் சமீபத்தில் ‘கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண பணிகளும் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு வரும் 10ம் தேதிக்குள் பதில் அளிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுவரைக்கும் போராட்டத்தை ஒத்திவைக்கலாமா என ஜாக்டோ ஜியோவிடம் நீதிபதிகள் கேட்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.