This Article is From Dec 02, 2018

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

டிசம்பர் 4-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Advertisement
தெற்கு Posted by

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத்தையே தொடர வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வரும் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அவர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதற்கிடையே ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் இன்று கூடி வேலை நிறுத்த போராட்டம் குறித்து விவாதித்தனர்.

இந்த சூழலில் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஸ்ரீதர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை தமிழக அரசிடம் தற்போதுதான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அறிக்கை குறித்து அரசு பரிசீலனை செய்து முடிவு எடுக்கும். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். கஜா புயல் நிவாரண பணியில் அரசு மும்முரம் காட்டி வரும் நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement