வறட்சியின் பிடியில் தமிழகம் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- உரிமைகளை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் மக்கள் பணியாற்ற முடியாது
- வறட்சியின் பிடியில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது
- ஊழியர்கள் நலனில் தமிழக அரசு முன்னிலையில் இருக்கிறது
சுயநலம் தவிர்த்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
மக்கள் நலனை காக்கும் வேளையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற தவறியது இல்லை. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டிலும் ஊதியக்குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
இதனால் அரசுக்கு ரூ. 14,500 கோடி கூடுதல் நிதிச்செலவு ஏற்பட்டது. பல மாநிலங்களில் சம்பளம் கூட உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. மக்களின் நலனுக்காக மாநில அரசு செயல்பட வேண்டும். இதில் என்னோடு அரசு ஊழியர்களாகிய உங்களுக்கும் முழு பங்கு உண்டு.
சுயலநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு தியாக உணர்வோடு சில நேரங்களில் உரிமைகளையும் விட்டுக் கொடுத்து மக்கள் பணியாற்றுவதே நம் கடமை. இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு தற்போது கடும் வறட்சியின் பிடியில் உள்ளது.
விவசாயத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். உரிமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது நாம் மேற்கொண்டிருக்கும் மக்கள் பணிக்கு பொருத்தமாக அமையாது. எனவே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களுடைய போராட்டங்களை கைவிட்டு மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)