பிரச்னை தொடர்ந்து இழுபறியான நிலையில் இருக்கும் சூழலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கருத்து கூறியுள்ளார்
ஹைலைட்ஸ்
- 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
- கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது, அமைச்சர் ஜெயக்குமார்
- முதல்வரை சந்திக்க அனுமதி வேண்டும், ஜாக்டோ-ஜியோ
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று தமிழக அரசு சார்பில், '95 சதவிகித ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டார்கள்' என ஒரு புள்ளி விவரம் அளிக்கப்பட்டது. இதை ஜாக்டோ-ஜியோ தரப்பு மறுத்துள்ளது.
இப்படி இந்தப் பிரச்னை தொடர்ந்து இழுபறியான நிலையில் இருக்கும் சூழலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், ‘மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். எல்லா வேலையைப் போன்றதல்ல ஆசிரியப் பணி என்பது. இப்போது தேர்வு வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கம் சீக்கிரம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவு மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். என் கோரிக்கை, ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான்' என்று கருத்து கூறியுள்ளார்.
முன்னதாக '95 சதவிகித ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டதாக கூறுகிறதே அரசு' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘அது உண்மையாக இருந்தால், ஏன் அரசு இன்னும் அச்ச நிலையிலேயே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராடுபவர்களை கேளுங்கள், உண்மை நிலை தெரியும்' என பதிலளிக்கப்பட்டது.