ஜாக்டோ-ஜியோ போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
ஹைலைட்ஸ்
- பணியிடை நீக்கம் உத்தரவை பிறப்பித்துள்ளது அரசு
- இட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது அரசு
- 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. இன்று பள்ளிக்குத் திரும்புமாறு ஆசிரியர்களுக்கு கெடு விதித்திருந்தது தமிழக அரசு. ஆனால், ‘கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை ஸ்டிரைக் வாபஸுக்கு வாய்ப்பே இல்லை' என்று ஜாக்டோ- ஜியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 5 சதவிகிதம் பேர் பணிக்குத் திரும்பியுள்ளனர். தொடக்கப் பள்ளிகளில் 63.78 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மீதமிருக்கும் காலிப் பணியிடங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும். பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் விரும்பும் இடங்களுக்கான இடமாறுதலும் தொடங்கியிருக்கிறோம்” என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் 450 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அவர்கள் இடத்திற்கு புதியதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், ஜாக்டோ-ஜியோ போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்கத்தின் இந்த அறிவிப்பைக் கண்டித்து, பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஊழியர்களும் நாளை முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ‘அரசின் கோரிக்கையை ஏற்று ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் பிடிவாதப் போக்கை கடைபிடித்தால், வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அந்த கட்டத்திற்கு எங்களை தள்ளி விடாதீர்கள். பணிக்குத் திரும்புங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்' என்று பேசியிருந்தார்.