This Article is From Jan 28, 2019

‘நடவடிக்கை பாயும்..!’- அரசு ஊழியர்களை எச்சரிக்கும் ஜெயக்குமார்

‘கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை ஸ்ட்ரைக் வாபஸுக்கு வாய்ப்பே இல்லை’ என்று ஜாக்டோ- ஜியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

Advertisement
தமிழ்நாடு Posted by

கடந்த 22-ம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.

Highlights

  • 22-ம் தேதி முதல் ஸ்டிரைக் நடந்து வருகிறது
  • துறை ரீதியான நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
  • ஒரு வாரத்துக்கு மேலாக ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. இன்று பள்ளிக்குத் திரும்புமாறு ஆசிரியர்களுக்கு கெடு விதித்திருந்தது தமிழக அரசு. ஆனால், ‘கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை ஸ்டிரைக் வாபஸுக்கு வாய்ப்பே இல்லை' என்று ஜாக்டோ- ஜியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில் சென்னை, ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஏற்கெனவே பல முறை ஜாக்டோ-ஜியோ சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் அரசு தரப்பு பேசியது. அரசுக்கு இருக்கும் சிரமங்களை அவர்களிடத்தில் நாங்கள் தெளிவாக எடுத்துச் சொன்னோம். தமிழக அரசுக்கு வரும் வருவாயில் கிட்டத்தட்ட 71 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம், நிர்வாகச் செலவு, வாங்கிய கடனுக்கு வட்டி ஆகியவற்றை கொடுப்பதிலேயே கழிந்து விடுகிறது. வெறும் 29 சதவிகிதம்தான் மற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 

57,000 கோடி ரூபாய் சம்பளம், 28,000 கோடி ரூபாய் ஓய்வூதியச் செலவும், நிர்வாகச் செலவு 10,000 கோடி ரூபாய். வரும் வருவாய் இப்படித்தான் செலவிடப்படுகிறது. இப்படியான சூழல் இருக்கையில், வளர்ச்சிக்கு எப்படி அரசு செலவழிக்க முடியும். ஊழியர்களின் கோரிக்கைகளை வேறு வழியில்லாமல்தான் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறோம். ஆனால், மீண்டும் மீண்டும் அதே கோரிக்கையைச் சொல்லி போராட்டம் நடத்துவதால், மாணவர்களுடைய எதிர்காலம் பாழாகும். அதை ஆசிரியர்கள் கருத வேண்டும். 

Advertisement

எனவே, அரசின் கோரிக்கையை ஏற்று ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் பிடிவாதப் போக்கை கடைபிடித்தால், வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அந்த கட்டத்திற்கு எங்களை தள்ளி விடாதீர்கள். பணிக்குத் திரும்புங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்' என்று பேசியுள்ளார்.
 

Advertisement