ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்
ஹைலைட்ஸ்
- அம்பேத்கரின் 125வது பிறந்தநாளுக்கு சந்திரபாபு நாயுடு திட்டம் அறிவித்தார்
- ஸ்மிருதி வனம் என்கிற திட்டத்தை அவர் அறிவித்தார்
- அந்த திட்டத்தை செயல்படுத்தும் முன்னரே நாயுடுவின் ஆட்சிக் காலம் முடிந்தது
Amaravati: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் 125 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.
ஆந்திராவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த போது, அம்பேத்கரின் 125வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சுமார் 200 கோடி ரூபாய்க்கு ஸ்மிருதி வனத் திட்டப்பணிகளை அறிவித்தார். ஆனால், சந்திரபாபுவால் அதை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது.
இதனையடுத்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவிக்கு வந்த பிறகு, ஸ்மிருதி வனத் திட்டத்தை அகற்றவும், அதற்கு பதிலாக விஜயவாடாவில் அம்பேத்கர் நினைவுப் பூங்காவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, விஜயவாடா நகரில் 125 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ‘இது ஒரு மதிப்புமிக்க திட்டமாக இருக்கும். முக்கிய சுற்றுலா தளமாக மாறும்' என்றார். மேலும், 20 ஏக்கர் பரப்பளவில் ஓர் அழகான பூங்கா உருவாக்கப்படும், அம்பேத்கரின் 125 அடி உயரமுள்ள சிலை அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமையும் என்றும் கூறினார்.
இதற்கு முன்பாக PWD மைதானம் என்று அந்த இடம் மிகப் பிரபலமானதாக அறியப்பட்டது. தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் அதனை, பி.ஆர். அம்பேத்கர் ஸ்வராஜ்ய மைதானம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். வரும் 2022 ஆம் ஆண்டு அம்பேத்கரின் 125 அடி உயர சிலை கட்டி முடிக்கப்பட்டு, அதே ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் பி.விஸ்வரூப் தெரிவித்துள்ளார்.