Read in English
This Article is From Jul 13, 2019

‘நாங்க 150 பேர்… நீங்க 20 பேர்…’- சந்திரபாபு முன்னிலையில் சட்டசபையில் கர்ஜித்த ஜெகன்!

முதல்வர் ஜெகன் இப்படி பேச, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement
Andhra Pradesh Edited by
Amaravati:

ஆந்திர சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும். சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசும்போது, எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்தின் எம்.எல்.ஏ-க்கள் குறுக்கிட்டனர். இதனால் கொதிப்படைந்த ஜெகன், அவர்களை வறுத்தெடுத்தார். 

“சபாநாயகரே… அவர்கள் வெறும் 20 பேர். எங்களின் பலம் 150 பேர்… நாங்கள் எழுந்தோம் என்றால், அவர்கள் சட்டமன்றத்தில் உட்காரக் கூட முடியாது. எதிர்க்கட்சியான உங்களுக்கு பொது சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. நீங்களெல்லாம் எப்படி தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்” என்று தன் சட்டசபை இருக்கையிலிருந்து எழுந்து உரத்தக் குரலில் பேசினார் ஜெகன்.

முதல்வர் ஜெகன் இப்படி பேச, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், ஒரு கட்டத்தில், எல்லோரும் அமருங்கள் என்று கூச்சலிட்டார் ஜெகன்.

Advertisement

தொடர்ந்து அவர், “சந்திரபாபு நாயுடு. நீங்கள் என்னை முரைப்பத்தால் நான் பயந்துவிட மாட்டேன்” என்று நேரடியாக முன்னாள் முதல்வருக்கு எச்சரிக்கை கொடுத்தார். 

முன்னதாக ஜெகன், “சந்திரபாபு நாயுடு தலைமையில் முன்னர் அமைந்த அரசு, பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு முறைகேடு குறித்தும் முறையாக விசாரிக்கப்படும். அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

Advertisement

சந்திரபாபு நாயுடுவுக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் நேரடி மோதல் வெடித்து வருகிறது. ஜெகன், சில நாட்களுக்கு முன்னர், “தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படவே இல்லை. வட்டியில்லா கடன் வழங்கியிருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்க முடியவில்லை என்றால், உங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். 

இதைத் தொடர்ந்து நாயுடு, சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் கொடுத்ததற்கான ஆவணங்களைக் காட்டினார். இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியினர், முதல்வர் ஜெகனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
 

Advertisement