இவர்கள் ஆண்ட்ராய்டு போனில் கேம் விளையாடிக் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள்... ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் செல்ஃபி பகிர்பவர்கள், அரசியல் தெரியாது, சமூக அக்கறை இல்லை, பொறுப்பு கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள், ஓட்டுப்போடும் நாளன்று ஐடி கம்பெனிக்கு வேலைக்குச் செல்பவர்கள் என்று ஓராயிரம் விமர்சனம் வைக்க்ப்பட்ட ஒரு தலைமுறை உலகில் எங்காவது உண்டு என்றால் அது 2016ம் ஆண்டுக்கு முன் தமிழகத்தில் இளைஞர்களாய் திரிந்தவர்கள் மீது சிலர் கட்டமைத்த மாய பிம்பம் என்று சொல்லலாம். அதையெல்லாம் உடைத்தெறிந்தது ஜல்லிக்கட்டுப் போராட்டம்.
மெரினாவில் இவர்கள் காதல்தான் செய்வார்கள் என்றவர்களுக்கு தமிழர்கள் மீதும் எங்களுக்குக் காதல் உண்டு என்று நிரூபித்தார்கள். செல்போன் ஒளியால் உரிமையை மீட்ட சமூகம் என்று ‘நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டது. தமிழ்நாடு இந்தியாவின் புரட்சிப் பிரதேசம். தமிழன் கூகுளை மட்டுமல்ல உலகையே ஆள்கிறான் என்றன சர்வதேச ஊடகங்கள்.
ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இந்தப் போராட்டத்தில் இருக்கிறார்கள் என்றனர் ஆட்சியாளர்கள். ஆம், அவர்களுக்கு ஜல்லிக்கட்டு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போராடியது ஜல்லிக்கட்டுக்காக அல்ல தமிழனின் உரிமைக்காக என்பதுதான் கவனிக்க வேண்டியது.
15 நாட்களுக்கும் மேலாக நீட்டித்தப் போராட்டம் கடற்கரையை விட்டு அகலாத லட்சம் இளைஞர்கள்… உலகின் எந்த ஒரு போராட்டத்திலும் இவ்வளவு இளைஞர்கள் ஒன்று சேர்ந்ததில்லை என்கின்றன புள்ளிவிவரங்கள். போராட்டம் நடந்த இடம் சட்டமன்றத்துக்கு அதிகாரிகள் பணிக்கு செல்லும் சாலை. 15 நாட்களில் ஒருநாள் கூட போக்குவரத்து இடையூறு ஆகவில்லை. ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு தடையின்றி சென்றன. இதெல்லாம் தான் இந்த இளைஞர்களின் கண்ணியம்.
உணவு பொட்டலங்களை எங்கிருந்தெல்லாமோ வந்து கொடுத்தார்கள். பெண்களும், குழந்தைகளும் இரவு முழுக்க பாதுகாப்பாக இருந்தார்கள். 15 நாளில் ஒரு பெண்களுக்கு எதிரான புகார் கூட பதிவாகவில்லை. "இந்தியாவின் எந்த நகரத்திலும் இந்தளவுக்கு பாதுகாப்பை பார்க்க முடியாது" என்று நாளிதழ்கள் தலையங்கம் தீட்டின. போராட்டக்காரர்களாக வாருங்கள் எங்களோடு அமருங்கள் என்று பிரபலங்களை சாலையில் அமர்ந்து சமமாக போராட வைத்தது இந்தப் போராட்டம்.
ஜிவி பிரகாஷ், சிம்பு, ஆர்ஜே பாலாஜி, லாரன்ஸ் ராகவேந்திரா, விஜய் என திரையுலகம் கொண்டாடிய நடிகர்களை வீதிக்கு வந்து குரல் கொடுக்க வைத்தது இந்தப் புரட்சி. மெரினா மட்டுமல்ல மதுரை அலங்காநல்லூர், கோயம்பத்தூர் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் ஆரம்பித்தது. அதற்கான விதையாக நின்றது மெரினா. இவர்களின் குரலில் சட்டமன்றம் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி ஓடத்துவங்கின.
அரசு அடக்கியது, உரிமைகளை முடக்கியது, யாரோ சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என தடியடி நடத்தியது இந்த அதிகார வர்க்கம். அவர்களிடம் ஒரேயொரு கேள்விதான். நீங்கள் பணியமர்த்திய போலீஸில் ஒருவர்தான், வெகுண்டெழுந்து ‘என் வேலை போனாலும் பரவாயில்லை' என்று போராட்டகளத்தில் மைக் பிடித்து பேசினார். "தடியடி நடக்கப்போகிறது வீட்டுக்குப் போய்விடுங்கள்" என அன்று அதிகாலையில் ரகசியமாக சில போலீஸ்காரர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களுக்கு தெரியும் யார் சமூக விரோதிகள் என்று.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு மாற்றத்துக்கான விதை… இனி தமிழகத்தில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் போராட்டம் நடந்தாலும் தமிழகத்தின் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஓர் உதாரணம். நாளைய சரித்திரத்தின் அடையாளம், ஒவ்வொரு பொங்கலையும் நமக்கு வீரத்தின் அடையாளமாக மாற்றியவர்கள், இந்தத் தைப் புரட்சி இளைஞர்கள். பெருமிதம் கொள்வோம். இவர்கள் தமிழர்களின் சர்வதேச அடையாளம்!