Madurai: மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி ஜன.17ஆம் தேதி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்று வட்டாரங்களில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் வந்திருந்ததனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதலில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிக கெடுபிடியுடன் செய்யப்பட்டதால், எந்த வித அசம்பாவிதங்களும் இல்லாமல் முழு நாள் ஜல்லிக்கட்டுப் போட்டியும் சுமூகமாக நடந்து முடிந்தது. அதைப் போல பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியும் எந்த விதப் பிரச்னைகளுமின்றி நடந்து முடிந்தது.
இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனியசாமி கோயில் திடலில் ஜன.17 காலை மணியளவில் கோலாகலமாக துவங்கியது. இதில், தமிழகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் காளைகளை ஜல்லிக்கட்டில் களம் இறக்கினர். உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வின் காளை பிடிபட்டுச் சென்றது. சசிகலாவின் காளை கருப்பு நிறத்தில் இருந்தது. வாடிவாசலில் இருந்தே துள்ளிய காளை, யாரிடமும் பிடிபடாமல் சென்று விட்டது.
இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தம்பியின் காளை உள்ளிட்டவையும் போக்கு காட்டி விட்டுச் சென்றன. இப்படி ஜல்லிகட்டு நடந்துகொண்டிருந்தபோது பார்வையாளர்களில் ஒருவராக நின்றுகொண்டிருந்த 45 வயது ஆடவர் ஒருவர் திடீரென மாண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கூட்ட நெரிசலில் அவர் மூச்சுவாங்க முடியாமல் மாரடைப்பில் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது