புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனைக் காண சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
தைப் பொங்கல் விழாவின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உற்சாகத்துடன் தொடங்கவுள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17-ம்தேதி தொடங்குகிறது.
அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுதினமும் தொடங்குகின்றன. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டு விட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. இதனைக் காண்பதற்காக தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தச்சன் குறிச்சியில் குவிந்துள்ளனர்.
தொடக்கவிழாவில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தப்போட்டியில் சுமார் 800 காளைகள் களம் இறங்குகின்றன. இவற்றை அடக்குவதற்காக 400-க்கும் அதிகமான இளைஞர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.