சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ ஒன்றில், போலீசார் பேருந்து ஒன்றின் மீது கேனில் இருக்கும் தீரவைத்தை ஊற்றுகின்றனர்.
New Delhi: புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் வன்முறை வெடித்தது.
இதனிடையே, நடந்த இந்த வன்முறை சம்பவத்தின் போது, பல பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. காவல்துறையை சேர்ந்த சிலர் வேண்டுமென்றே இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உட்பட பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ ஒன்றில், போலீசார் பேருந்து ஒன்றின் மீது கேனில் இருக்கும் தீரவைத்தை ஊற்றுகின்றனர்.
இதுகுறித்து துணை முதல்வர் சிசோடியா தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, இந்த புகைப்படத்தை பாருங்கள்... பேருந்து மற்றும் கார்களுக்கு யார் தீ வைப்பது என்பதை.. பாஜகவின் பரிதாப அரசியலுக்கு இந்த புகைப்படம் மிகப்பெரிய சான்று... இதற்கு பாஜக தலைவர்கள் பதிலளிக்க முடியுமா?.. என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் டெல்லி போலீஸார் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ்.ரந்தாவா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், 'நீங்கள் முழு வீடியோவையும் பார்க்க வேண்டும். பேருந்துக்கு வெளியே தீ பற்றி எறிந்தது. அந்த தீயை அணைக்கவே போலீசார் தண்ணீர் ஊற்றினர்' என்று கூறினார்.
நாங்கள் போராட்டக்காரர்களை கலைக்கும்போது, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கல் வீசப்பட்டது.. இதையடுத்து, காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர்.. பல்கலைக்கழகத்தின் உள்ளே இருந்து கற்கள் வீசப்பட்டதால், ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய தென்கிழக்கு டெல்லியின் துணை காவல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் கூறும்போது, துணை முதல்வர் சிசோடியாவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார்.
மேலும், போலீசாரின் நடவடிக்கையை ஆதிரித்து பேசிய அவர், அவர்கள் மாணவர்களா அல்லது உள்ளூரை சேர்ந்த கும்பலா என்று எங்களால் கூற முடியவில்லை.. அதில் 1,500 முதல் 2,000 க்கும் அதிகமானோர் இருந்தனர். அவர்கள் பேரணியின் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் ரிங் சாலையை நோக்கி சென்று மாநகர பேருந்துகளை தீ வைத்து எரித்தனர், "என்று அவர் கூறினார்.
இதனால், "நாங்கள் அவர்களை பின்னுக்குத் தள்ள வேண்டியிருந்தது. இதனிடையே, அவர்கள் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசத் தொடங்கினர். அந்த பகுதியில் இருந்து அவர்கள் அமைதியாக செல்லவில்லை. அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் வன்முறையாகவும் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, பேரணி தொடங்கிய ஜாமியா நகர் பகுதிக்கே அவர்கள் தள்ளப்பட்டனர் என்று கூறிய அவர், அந்த பொது சாலையில் இருபக்கமும் பல்கலைக்கழகம் உள்ளது. இப்படி வன்முறை கும்பலை நாங்கள் கலைத்த போது, அவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தனர் என்றார்.
வாகனங்கள் தீ வைப்பு சம்பவத்திற்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று டெல்லி காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், உத்தர பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசார் பொதுமக்களின் இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்குவது கேமராவில் பதிவானது. அந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.