This Article is From Aug 03, 2019

’அமைதியை கடைபிடியுங்கள்.. வதந்திகளை நம்பாதீர்கள்’: காஷ்மீர் ஆளுநர் வேண்டுகோள்!

காஷ்மீரில் துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் உமர் அப்துல்ல, மெஹபூபா முஃப்தி ஆகியோர் காஷ்மீர் ஆளுநரை சந்திக்க வலியுறுத்தினர்.

பிரிவு 35-Aவை ரத்து செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Srinagar:

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனடியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கனவே, காஷ்மீர் முழுவதும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். 

இந்நிலையில், 'அமைதியை கடைபிடியுங்கள்.. வதந்திகளை நம்பாதீர்கள்' என அரசியல்வாதிகளுக்கு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத்தின் துணையுடன் இந்தியாவிற்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை கெடுக்கும் வகையில், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியானது. இந்த பெரும் தாக்குதல் முயற்சி இந்திய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர்கள் பயன்படுத்த இருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணிவெடி மற்றும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்-24 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையிலும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாத்திரை முடித்தவர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரலான கே.ஜே.எஸ்.தில்லான், பாகிஸ்தானின் வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜம்மு-காஷ்மீரின் அமைதியை கெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்தது. 

தொடர்ந்து, மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து முன்னாள் உமர் அப்துல்ல, மெஹபூபா முஃப்தி ஆகியோர் காஷ்மீர் ஆளுநரை சந்திக்க வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து, காஷ்மீர் ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை மற்ற பிரச்னைகளோடு இணைத்து பார்ப்பதால் தேவையற்ற பீதி உண்டாகுகிறது. அரசியல்வாதிகள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35-A சட்டப் பிரிவை ரத்தும் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பாதுகாப்பு நடவடிக்கை என்பது, தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைக்காகவே மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.