This Article is From Oct 08, 2018

13 ஆண்டுகள் கழித்து ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகள் கழித்து உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது

13 ஆண்டுகள் கழித்து ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது

ஹைலைட்ஸ்

  • தேசிய கான்ஃபரன்ஸ் மற்றும் பிடிபி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன
  • 2,990 வேட்பாளர்கள் இநதத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்
  • தேர்தலையொட்டி, பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது
Srinagar:

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகள் கழித்து உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலை அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான தேசிய கான்ஃபரன்ஸ் மற்றும் பிடிபி ஆகியவை புறக்கணித்துள்ளன. அம்மாநிலத்தின் 422 உள்ளாட்சித் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. 

422 தொகுதிகளில் 2,990 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நான்கு கட்டங்களாக நடக்கும் இந்தத் தேர்தல் இன்று ஆரம்பித்து, அக்டோபர் 16 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

ஆனால், இதுவரை 240 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான பிரசாரங்கள் முழு வீச்சில் நடந்து வந்த நிலையில், தீவிரவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல் வரவே, கடந்த சனிக்கிழமையுடன் அது நிறுத்தப்பட்டுள்ளது. பல வேட்பாளர்கள் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து, பாதுகாப்பினருக்குக் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சட்ட சாசனத்தில் இருக்கும் 35ஏ பிரிவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தேசிய கான்ஃபரன்ஸ் மற்றும் பிடிபி கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. தேர்தல் குறித்து பிடிபி, ‘35ஏ பிரிவை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கொதிப்பில் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் நடந்தால், அது ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும்’ என்று கருத்து தெரிவித்துள்ளது. 

1954 ஆம் ஆண்டு, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 35 ஏ பிரிவு இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இணைக்கப்பட்டது. இந்தப் பிரிவின் மூலம், ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாதென்று விதியுள்ளது. அதேபோல, அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் முடித்தால், அங்கு சொத்துரிமை கோர முடியாது என்றும் விதி வகுக்கப்பட்டுள்ளது.

பிடிபி, தேசிய கான்ஃபரன்ஸ் தவிர பிற கட்சிகளும் இந்தத் தேர்தலில் பங்கெடுப்பதைத் தவிர்த்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ், கூட இந்தத் தேர்தலில் பங்கெடுக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.

இன்றை அடுத்து, அக்டோபர் 10, 13 மற்றும் 16 தேதிகளில் அடுத்தக்கட்டத் தேர்தல் நடக்கும். இதையடுத்து அக்டோபர் 20-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

.