கடந்த ஆக.5ம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீரில் கடும் கட்டுபாடுகளின் கீழ் உள்ளது.
Jammu: ஜம்மு-காஷ்மீரில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், 5 மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மீண்டும் செல்போன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது.
இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை பார்வையிட சென்ற அரசியல் தலைவர்கள் பலரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். காஷ்மீரில் விதிகப்பட்ட கடும் கட்டுபாடுகள் படிப்படியாக தளர்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறும்போது, காஷ்மீரில் ஏற்கனவே லேண்ட்லைன் சேவைகள் துவங்கப்படும் என அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, தற்போது செல்போன் சேவைகளும் துவங்கப்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு, கட்டுப்பாடுகள் மிகவும் அவசியமாகும். இணையதள சேவையை தேச விரோத சக்திகள் தங்களது களமாக பயன்படுத்துகின்றன. ஆதலால் இணையதள சேவை முடக்கம் மேலும் சில காலம் நீடிக்கும். தற்போதைக்கு இணையதள சேவை முடக்கத்தை நீக்கும் திட்டமில்லை.
ஜம்மு-காஷ்மீரில் அடுத்த சில மாதங்களில் புதிதாக 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஆள்சேர்ப்பு நடவடிக்கையாக இது இருக்கும் என்று அவர் கூறினார்.